உள்ளடக்கத்துக்குச் செல்

பேராக்

ஆள்கூறுகள்: 4°45′N 101°0′E / 4.750°N 101.000°E / 4.750; 101.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராக் தாருல் ரிதுவான்
Perak Darul Ridzuan
ڤيراق دار الرضوان
பேராக்

கொடி

சின்னம்
பண்: Allah Lanjutkan Usia Sultan
பேராக் மாநிலத்தின் அமைவிடம்
பேராக் மாநிலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°45′N 101°0′E / 4.750°N 101.000°E / 4.750; 101.000
நாடு மலேசியா
பேராக் சுல்தானகம்1528
பங்கோர் உடன்படிக்கை1874
கூட்டமைப்பு மாநிலங்கள்1895
சப்பானிய ஆக்கிரமிப்பு1942
மலாயா கூட்டமைப்பு1948
விடுதலை31 ஆகஸ்டு 1957
தலைநகர்ஈப்போ
அரச நகர்கோலாகங்சார்
அரசு
 • ஆளும் கட்சிபாரிசான் நேசனல் - அம்னோ
 • பேராக் சுல்தான்பேராக் சுல்தான் நசுரின் சா
 • மந்திரி பெசார்சராணி முகமது
பரப்பளவு
 • மொத்தம்20,976 km2 (8,099 sq mi)
மக்கள்தொகை
 (2018)
 • மொத்தம்25,00,000
அஞ்சல் குறியீடு
30xxx to 36xxx
39xxx
தொலைபேசி எண்05
போக்குவரத்துப் பதிவெண்A
மனித வளர்ச்சிக் குறியீடு (2019) 0.809[2]
மிக உயர்வு ·
GDP (nominal)2022
 • மொத்தம் $21.161 பில்லியன்
(RM 93.112 பில்லியன்)[3]
 • தனிநபர் $8,391
(RM 36,924)[3]
GDP (PPP)2022
 • மொத்தம் $50.768 பில்லியன்
 • தனிநபர் $23,370

பேராக் ஆங்கிலம்: Perak; மலாய் Perak Darul Ridzuan; சீனம்: 霹雳; ஜாவி: ڤيراق) என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒரு மாநிலம். இது மலேசியத் தீபகற்பத்தில் இரண்டாவது பெரிய மாநிலம். இந்த மாநிலத்தின் வடக்கே தாய்லாந்தின் யாலா மாநிலம் உள்ளது. மலேசியாவின் மற்றும் ஒரு மாநிலமான கெடா வடக்கே உள்ளது. பேராக் மாநிலத்திற்கு வட மேற்கே பினாங்கு மாநிலம் உள்ளது. கிழக்கே கிளாந்தான், பகாங் மாநிலங்கள் உள்ளன. தெற்கே சிலாங்கூர் மாநிலமும் மேற்கே மலாக்கா நீரிணையும் அமைந்து உள்ளன.

பேராக் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போ ஆகும். வரலாற்றுச் சான்றுகளின் படி[4] வெள்ளீயம் இங்கு அகழ்ந்து எடுக்கப் பட்டு வந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈப்போ மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. அந்தக் கால கட்டத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்கள், ஈப்போவை மலேசியாவின் இரண்டாவது தலைநகரமாகத் தரம் மேம்படுத்தி வழி நடத்தினர்[சான்று தேவை].

வெள்ளீயத்தின் விலை உலகளாவிய அளவில் குறைந்ததன் காரணமாகப் பேராக் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்தது. அதனால் அதன் பொருளாதார வளர்ச்சியும் தேக்கம் அடைந்தது. பேராக் வாழ் இளைஞர்கள் வேலைகளைத் தேடி இப்போது வெளியூர்களுக்குச் செல்கின்றனர்.

ஈப்போவில் வரலாற்றுப் புகழ்மிக்க பல கட்டடங்கள் உள்ளன. அவற்றில் இரயில்வே நிலையம், மாநகர் மன்றம், கிந்தா இந்தியர் விளையாட்டு அரங்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஈப்போ நகரத்தின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் சீனர்கள் ஆகும். 18 விழுக்காட்டினர் இந்தியர்கள். பேராக் மாநிலத்தின் அரச நகரம் கோலாகங்சார் ஆகும். இங்கு பேராக்கின் சுல்தானகம் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

பல நூற்றாண்டுகளுக்கு முன் பேராக் மாநிலத்தின் வட மேற்கே கங்கா நகரம் எனும் ஒரு புராதன நகரம் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[5] மலாக்கா பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர், பேராக் மாநிலத்தின் நவீன வரலாறு தொடங்குகிறது.

1511 ஆம் ஆண்டு மலாக்காவைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். அப்போது சுல்தான் முகமது ஷா ஆட்சியில் இருந்தார். இவருடைய மூத்த மகன் ராஜா முசபர் ஷா என்பவர் அங்கு இருந்து தப்பித்து வந்தார். பேராக் ஆற்றின் கரையோரம் தஞ்சம் அடைந்தார். இந்த இடத்தில் தான் ஒரு புதிய சுல்தான் ஆட்சியகம் உருவாக்கப் பட்டது. இது நடந்தது 1528 ஆம் ஆண்டு.

பேராக் மாநிலம் ஈயத்திற்குப் பெயர் போனது. அதனால் தான்[6] காலம் காலமாக அதன் பாதுகாப்பிற்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. பேராக் என்றால் மலேசிய மொழியில் வெள்ளீயம் என்று பொருள்.

டச்சுக்காரர்களின் காலனித்துவம்[தொகு]

பங்கோர் தீவில் உள்ள டச்சுக் கோட்டை

17 ஆம் நூற்றாண்டில் பேராக் மாநிலத்தின் ஈய வணிகத்தை ஒட்டு மொத்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு டச்சுக்காரர்கள் முயற்சி செய்தனர். பங்கோர் தீவிலும் பேராக் நதியின் முகத்துவாரத்திலும் டச்சுக்காரர்கள் பல கோட்டைகளைக் கட்டினார்கள். 1641 ஆம் ஆண்டில் தான் டச்சுக்காரர்கள் பேராக் மாநிலத்தில் அடி எடுத்து வைத்தனர்.

அவர்கள் மலாக்கா நீரிணையைத் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விருப்பம் கொண்டு இருந்தனர். பேராக் மாநிலத்தின் மொத்த ஈய வணிகத்தையும் தங்களின் கைவசம் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால், அவர்களுடைய எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதற்கு மாறாக பேராக் மாநில ஈய வணிகச் சந்தையில் வெற்றி கண்டவர்கள் ஆங்கிலேயர்கள் தான். மலாயாவுக்கு முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள். அடுத்து வந்தவர்கள் டச்சுக்காரர்கள். கடைசியாக வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தக் கடைசியாக வந்தவர்கள் தான் வெற்றி பெற்றார்கள்.

அந்தக் கால கட்டத்தில் பேராக் மாநிலத்தைச் சுல்தான் முஷபர் ஷா என்பவர் ஆண்டு வந்தார். அவரைக் கவருவதற்கு டச்சுக்காரர்கள் பல வகையான தந்திரங்களைக் கையாண்டனர். இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை. டச்சுக்காரர்களின் வணிகத் தந்திரங்கள் சுல்தானிடம் பலிக்கவில்லை. ஆக, அவர்களின் கவனம் சுமாத்திராவில் இருந்த ஆச்சே சுல்தான் பக்கம் திரும்பியது.

அப்போது ஆச்சே அரசின் ஆளுமை சுல்தானா தாஜுல் ஆலம் சபியத்துத்தீன் என்பவரிடம் இருந்தது. டச்சுக்காரர்களுக்காக பேராக் அரசை அச்சே அரசு நெருக்கத் தொடங்கியது. ஆச்சே அரசின் நெருக்குதல்கள் அதிகரித்தன. அதன் காரணமாக பேராக் சுல்தான் டச்சுக்காரர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய ஒரு நிர்பந்தமும் ஏற்பட்டது.

1650 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி கோலா பேராக் எனும் இடத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பேராக் அரச குடும்பத்தில் முழு மன நிறைவை ஏற்படுத்தவில்லை.

கோலா பேராக் ஒப்பந்தம்[தொகு]

இருப்பினும், டச்சுக்காரர்கள் கோலா பேராக்கில் ஒரு வணிகத் தளத்தை அமைத்தனர். பேராக் மக்கள் மன நிறைவு இல்லாமல் இருந்தனர். ஒரு நாள் தெமாங்கோங் டச்சுக்காரர்களின் அந்த வணிகத் தளத்தைத் தாக்கினார்.

தன்னுடைய படைகளைக் கொண்டு அந்தத் தளத்தை முற்றாக அழித்தும் விட்டார். அதனால் டச்சுக்காரர்கள் பேராக்கில் இருந்து வெளியாக வேண்டிய ஒரு கட்டாய நிலைமை ஏற்பட்டது.

1655 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தங்களின் பிரதிநிதி ஒருவரை பேராக் மாநிலத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தார்கள். டச்சுக்காரர்களின் தலையாய நோக்கம் 1650ல் செய்து கொண்ட ஒப்பந்ததைப் புதுப்பிப்பதாகும்.

அடுத்து டச்சுக்காரர்கள் கட்டி இருந்த வணிகத் தளத்தைத் தாக்கி சேதப் படுத்திய தெமாங்கோங்கின் செயல்களுக்காக நஷ்டயீடு கோருவதாகும்.

ஐந்து ஆண்டுகள் கழித்து[தொகு]

இருப்பினும் பேராக் அரசு டச்சுக்காரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. டச்சுக்காரர்கர்கள் கோபம் அடைந்தார்கள். பேராக் அரசைத் தாக்குவதற்கு முற்றுகை இட்டனர். அதற்குள் இதை அறிந்த பேராக் மக்கள் துணிகரமான ஓர் எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகினர். சுமாத்திராவின் அச்சே மக்களையும் ஊஜோங் சாலாங் மக்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு டச்சுக்காரர்களைத் தாக்கினார்கள்.

இந்தத் தாக்குதலை டச்சுக்காரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு டச்சுக்காரர்காரர்கள் தலைமறைவாயினர். அதன் பின்னர் அவர்கள் இந்தோனேசியாவின் பக்கம் திரும்பி தங்கள் கைவரிசையைக் காட்டினர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தோனேசியாவிற்குள் ஊடுருவி அந்த நாட்டையே கைப்பற்றினர். மூன்று நூற்றாண்டுகளுக்கு ஆட்சி செய்தனர்.

டச்சுக் கோட்டை

முற்றுப் புள்ளி[தொகு]

இதற்கு இடையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1670ல் மறுபடியும் டச்சுக்காரர்காரர்கள் பேராக்கிற்கு வந்தனர். வியாபாரம் செய்ய பேராக் அரசிடம் அனுமதி கேட்டனர். இந்த முறை பேராக் அரசு டச்சுக்காரர்காரர்களுக்கு அனுமதி வழங்கியது. அதற்கும் ஒரு காரணம் உண்டு: எந்த நேரத்திலும் சயாம் அரசு தன் படைகளைக் கொண்டு வந்து பேராக் அரசின் மீது தாக்குதல் நடத்தலாம் எனும் அச்சம் பரவி இருந்தது[சான்று தேவை]. அதனால் முன் எச்சரிக்கையாகப் பேராக் அரசு வணிகத் தளம் அமைக்க அனுமதி கொடுத்தது.

பங்கோர் தீவில் டச்சுக்காரர்காரர்கள் ஒரு சின்ன கோட்டையைக் கட்டினார்கள். அவர்கள் கோட்டை கட்டிய இடத்தின் பெயர் கோத்தா காயு. இதற்கு கோத்தா பெலாண்டா எனும் மற்றொரு பெயரும் உண்டு. அந்தக் கோட்டையின் சிதறிய பாகங்களை இன்றும் பாங்கோர் தீவில் பார்க்க முடியும்.

இருந்த போதும் டச்சுக்காரர்களின் அணுகுமுறை தெமாங்கோங்கிற்குப் பிடிக்கவில்லை. 1685ல் மறுபடியும் டச்சுக்காரர்காரர்களைத் தாக்கிக் கோட்டையைக் கைப்பற்றினார். வேறு வழி இல்லாமல் டச்சுக்காரர்காரர்கள் பின் வாங்கிச் சென்றனர். சில முறை சமரசம் பேச டச்சுக்காரர்காரர்கள் முயற்சி செய்து பார்த்தனர். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அத்துடன் டச்சுக்காரர்காரர்களின் வணிக, அரசியல் தலையீடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களின் தலையீடு[தொகு]

19ஆம் நூற்றாண்டில் சுமாத்திராவில் இருந்து பூகிஸ்காரர்கள், ஆச்சேக்காரர்கள், வடக்கே தாய்லாந்தில் இருந்து சயாம்காரர்கள் என்று அனைவரும் பேராக் மீது படை எடுத்துள்ளனர். 1820 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் தலையிட்டதால் சியாம் நாட்டின் தாக்குதல் தவிர்க்கப்பட்டது. தொடக்கத்தில் மலாயாவில் காலனித்துவத்தைத் தோற்றுவிக்கும் எண்ணம் ஆங்கிலேயர்களுக்கு இருக்கவில்லை.

இருப்பினும் அந்தக் கால கட்டத்தில் பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் நிறைய ஈய வயல்கள் புதிது புதிதாய்த் தோன்றின. அவற்றில் ஆங்கிலேயர்கள் நிறைய முதலீடுகள் செய்தும் இருந்தனர். இந்த ஈய வயல்களில் வேலை செய்ய சீனாவில் இருந்து சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து குவிந்தனர்.

இரகசியக் கும்பல்களின் மோதல்கள்[தொகு]

அப்படி வந்தவர்கள் தங்களுக்குள் இரகசியக் கும்பல்களைத் தோற்றுவித்துக் கொண்டனர். உள்ளூர் மலாய்ச் சமூகத்தின் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். அதனால் இரகசியக் கும்பல்களின் மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. பேராக் அரசிலும் பதவிச் சிக்கல்கள் மேலோங்கி இருந்தன.

ஆகவே, இரகசியக் கும்பல்களின் ஊடுருவல்களைத் தடுக்க முடியவில்லை. ஈய வயல்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பேராக் மாநிலத்தில் இருந்த எல்லா இரகசிய கும்பல்களும் போட்டிப் போட்டன. இசபெல்லா லுசி பெர்ட் (1831-1904) Isabella Lucy Bird என்பவர் மலேசிய வரலாற்றில் நல்ல ஒரு மதிப்பைப் பெற்றவர். தரம் வாய்ந்த மலேசிய வரலாற்றுப் படிவங்களை மலேசிய மக்களுக்குத் தந்தவர்.

இவர் எழுதிய நூல்களில் இருந்து பல அரிய மலேசிய வரலாற்றுச் சான்றுகள் மலேசியர்களுக்குக் கிடைத்துள்ளன. இவர் 1892ல் The Golden Chersonese and The Way Thither எனும் ஒரு வரலாற்று நாவலை எழுதினார்.

சீனக் கோடீஸ்வரர் தான் கிம் சிங்[தொகு]

அப்போதைய பேராக் சுல்தான் ராஜா மூடா அப்துல்லா சிங்கப்பூரில் இருந்த ஆங்கிலேயர்களின் உதவிகளை எப்படி பெற்றார் என்பதை அந்த நாவலில் இசபெல்லா விளக்கமாகச் சொல்கிறார். ராஜா மூடா அப்துல்லா சிங்கப்பூரில் இருந்த சீனக் கோடீஸ்வரர் தான் கிம் சிங் என்பவரின் உதவியை நாடினார்.

அப்போது சிங்கப்பூரின் ஆளுநராக இருந்த சர் அண்ட்ரு கிளார்க்கிற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிததை எழுத கோடீஸ்வரர் தான் கிம் சிங் பெரிதும் உதவினார்.

ஆங்கிலேயர்களின் பாதுகாப்பைப் பேராக் அரசு விரும்புவதாக அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. பேராக் மாநிலத்தில் ஒரு நிலையான அரசாங்கம் உருவாக ஆங்கிலேயர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே பேராக் மாநிலத்தில் இருந்த சுங் சான் இரகசியக் கும்பலுக்கும் சென் நிங் இரகசியக் கும்பலுக்கும் இடையே தாக்குதல்கள் பலமுறை நடைபெற்றுள்ளன.

ஆங்கிலேயர்கள் பேராக்கிற்கு வந்து அந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு சீனத் தலைவர்களும்[சான்று தேவை] கேட்டுக் கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு அது சாதகமானது. தென்கிழக்கு ஆசியாவில் தங்களின் மேலாண்மையை வலுப்படுத்த அது ஓர் அரிய பெரிய வாய்ப்பு என்று ஆங்கிலேயர்கள் கருதினர்.

ஆங்கிலேய மேலாளர்[தொகு]

அதன் படி 1874 ஆம் ஆண்டு பேராக், பங்கோர் தீவில் ஒரு பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்னர் ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. ராஜா மூடா அப்துல்லா பேராக் அரசின் அதிகாரப்பூர்வச் சுல்தானாக நியமிக்கப் பட்டார். அவருக்குப் போட்டியாக இருந்த சுல்தான் இஸ்மாயில் ஒதுக்கப் பட்டார். பேச்சு வார்த்தையில் அவர் கலந்து கொள்ளவும் இல்லை. மேலும், ஆங்கிலேயர்களின் இந்த உதவிக்கு பேராக் அரசு ஓர் ஆங்கிலேய மேலாளரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளை போடப் பட்டது. British Resident என்பவரைத் தான் இங்கே ஆங்கிலேய மேலாளர் என்று அழைக்கப் படுகிறார்.

சுல்தான் அப்துல்லா அந்த ஆங்கிலேயர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். ஆங்கிலேய மேலாளர் பதவி ஓர் உயர்தரமான பதவி. கூடுதலான அதிகாரங்களைக் கொண்டது. ஆங்கிலேயர்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மேலாளர் பதவியைப் பல மலாய்த் தலைவர்கள் விரும்பவில்லை. அடிக்கடி சலசலப்புகள் ஏற்பட்டன. உச்ச கட்டமாக 1875 ஆம் ஆண்டு பேராக் மாநில ஆங்கிலேய மேலாளராக இருந்த ஜேம்ஸ் பர்ச் என்பவர் பாசிர் சாலாக் எனும் இடத்தில் கொலை செய்யப் பட்டார்.

அதைத் தொடர்ந்து 1876 ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் ஒரு சின்ன கலவரம் நடைபெற்றது. அதற்கு பேராக் போர் என்றும் பெயர் சூட்டப் பட்டது. இந்தக் கலவரத்திற்குப் பின்னர் சுல்தான் அப்துல்லா செய்சீல்ஸ் தீவுகளூக்கு நாடு கடத்தப் பட்டார்[சான்று தேவை].

ராஜா அப்துல்லா நாடு கடத்தல்[தொகு]

செய்சீல்ஸ் தீவுகள் இந்து மாக்கடலில் மடகாஸ்கார் தீவுக்கு 1500 கி.மீ வட கிழக்கே இருக்கிறது. 115 குட்டித் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டம். சுல்தான் அப்துல்லா தன் எஞ்சிய நாட்களை அந்தத் தீவிலேயே கழித்தார். அங்கேயே மறைந்தும் போனார். கொலை செய்யப்பட்ட ஜேம்ஸ் பர்ச்சிற்குப் பதிலாக சர் ஹியூ லோ என்பவர் ஆங்கிலேய மேலாளராக வந்தார்.

மலாயாவின் வரலாற்றைத் திருப்பிப் போட்ட மாமனிதர் என்று சொன்னால் தப்பு இல்லை. ஏன் என்றால் இந்த மனிதர் தான் ரப்பரை மலாயாவுக்கு அறிமுகம் செய்தார். இலங்கைத் தீவில் இருந்து ரப்பர் கொட்டைகளைத் திருடி வந்து மலாயாவில் நட்டு வரலாறு படைத்தவர்[சான்று தேவை]. மலாயாவை உலக அரங்கில் ஓர் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றவர்.

1896 ஆம் ஆண்டு கூட்டு மலாய் மாநிலங்களின் அமைப்பு எனும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. ஏற்கனவே இருந்த சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலங்களுடன் பேராக் மாநிலமும் இணைக்கப் பட்டது. 1948 ஆம் ஆண்டு வரை இந்த கூட்டமைப்பு இருந்தது. பின்னர் மலாயாக் கூட்டரசு அமைக்கப் பட்டது. 1957 ஆம் ஆண்டு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கும் வரையில் பேராக் மாநிலம் அதில் உறுப்பியம் பெற்று இருந்தது.

மாநில அரசியல் 2022[தொகு]

Perak State Assembly Composition
இணைப்பு கூட்டணி/கட்சி தலைவர் நிலை இடங்கள்
2022 தேர்தல் தற்போது
    
    
பாரிசான் நேசனல்
பாக்காத்தான் அரப்பான்
சராணி முகமது அரசு 33 33
     பெரிக்காத்தான் நேசனல் ரசுமான் சக்காரியா எதிரணி 26 26
மொத்தம் 59 59
அரசு பெரும்பான்மை 7 7

பேராக் மாநில நிர்வாகம்[தொகு]

பேராக் மாநில சட்ட அரசியல் அமைப்பின் படி, இந்த மாநிலத்தில் மன்னர் ஆட்சி நல்லபடியாக நடைபெறுகிறது. இப்போது சுல்தான் அஷ்லான் முகிபுடின் ஷா நல்லாட்சி செய்கிறார். இவர் மலேசியாவின் ஒன்பதாவது மாமன்னராகவும் ஆட்சி செய்தவர். மலேசிய வரலாற்றில் இவரை மிகவும் படித்த மன்னர் என்றும் போற்றப்படுகிறார். மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணி புரிந்த பெருமை இவருக்கு உண்டு.

இவருடைய அரண்மனைக்குள் சாதாரண குடிமக்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டும் என்றாலும் போகலாம். வரலாம். அரண்மனைக்குள் நுழையும் எவரும் வெறும் கையுடன் திரும்புவது இல்லை. வயிறு நிறைய உணவு. வாய் நிறைய இனிப்புப் பண்டங்கள். ஒரு சிலருக்கு அன்பளிப்புகளும் கிடைக்கும். இவருக்கு உலக நாடுகள் பல விருதுகளை வழங்கி உள்ளன. இவர் ஐக்கிய நாட்டின் அனைத்துலக நீதிமனறத்தின் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மாநில அரசாங்கம்[தொகு]

மலேசியாவின் 12 ஆவது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தல் மலேசியாவின் அரசியலையே ஓர் ஆட்டம் காண வைத்தது. மலேசியாவின் ஐந்து மாநிலங்கள் எதிர்க் கட்சியின் கரங்களில் வீழ்ந்தன. அவற்றுள் ஒன்று தான் பேராக் மாநிலம். எதிர்க் கட்சியின் கரங்களில் வீழ்ந்த பிறகு பேராக் மாநிலத்தின் சட்டசபைக்கு ஒரு தமிழர் சபாநாயகராக நியமிக்கப் பட்டார்.

மலேசியத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆரவார மகிழ்ச்சியில் திளைத்தனர். அவருடைய பெயர் வி. சிவகுமார். இந்தக் கால கட்டத்தில் மலேசியத் தமிழர்களுக்கு மற்றும் ஓர் அரசியல் அங்கீகாரம் கிடைத்தது. மலேசியாவின் மற்றொரு மாநிலமான பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகப் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி அறிவிக்கப் பட்டார்.

வி.சிவகுமார்[தொகு]

மலேசியத் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரங்கள் அவை. இப்போது பேராக் மாநிலத்தின் பழைய சட்டசபை கலைக்கப் பட்டு விட்டது. மாற்று நிர்வாகம் செயல் பட்டு வருகிறது. இருப்பினும் இந்தப் புதிய சட்ட சபையிலும் ஒரு தமிழர் சபாநாயகராக இருக்கிறார். அவருடைய பெயர் டத்தோ ஆர். கணேசன்.

மலேசியாவின் 12 ஆம் பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பாரிசான் நேசனல் தோல்வி அடைந்தது. எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றன. மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கெடிலான் எனும் ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கின. பின்னர் அவை மாநிலத்தின் நிர்வாகத்தையும் ஏற்றுக் கொண்டன.

டத்தோ ஆர்.கணேசன்[தொகு]

புதிய முதல்வராக முகமட் நிஜார் ஜமாலுடின் பதவி ஏற்றார். வி. சிவகுமார் சபாநாயகராக உறுதி மொழி எடுத்துக் கொண்டார். எனினும், 2009 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 3 ஆம் தேதி பேராக் மாநில அரசியலில் ஓர் அதிர்ச்சியான நிகழ்ச்சி நடந்தது.

ஆளும் கெடிலான் கூட்டு அமைப்பைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகிக் கொண்டனர். ஜெலாப்பாங் சட்ட மன்ற உறுப்பினர் ஹீ இட் பூங், பேராங் சட்ட மன்ற உறுப்பினர் ஜமாலுடின் ராட்சி, சங்காட் ஜெரிங் சட்ட மன்ற உறுப்பினர் ஒஸ்மான் சாபு ஆகிய மூவர்.

அதனால், கெடிலான் கூட்டு அமைப்பிற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போய் விட்டது. இந்தக் கட்டத்தில் விரும்பத் தகாத சிற்சில அசம்பாவிதங்களும் நடைபெற்றன. பேராக் சுல்தான் உடனடியாக கெடிலான் கூட்டு அமைப்பை ரத்துச் செய்தார். இருப்பினும் மாநிலச் சட்ட சபையைக் கலைக்க மறுத்து விட்டார். அதனால் புதிய தேர்தலை நடத்த வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமையும் ஏற்பட்டது.

அரசியல் பனிப் போர்[தொகு]

அதைத் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ஈப்போ நகரில் நடைபெற்றன. பல வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டன. பல முக்கிய அரசியல் தலைவர்களும் கைது செய்யப் பட்டனர். உச்சக் கட்டமாக 2009 மே மாதம் 7 ஆம் தேதி தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை எடுத்துக் கொண்டது. அது சட்டப்படி செல்லாது என்று மே மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

மே மாதம் 12 ஆம் தேதி மலேசிய உச்ச நீதிமன்றம் ஒரு புது தீர்ப்பை வழங்கியது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகாது என்றது. மாநில அரசாங்கம் தேசிய முன்னணிக்குத் தான் வழங்கப் பட வேண்டும் என்று மே மாதம் 22 ஆம் தேதி முடிவும் செய்து தீர்ப்பும் வழங்கியது.

பாரிசான் நேசனல்[தொகு]

பின்னர் நினைவுகள் எனும் தேசிய முன்னணி பதவி ஏற்றது. டத்தோ ஸ்ரீ டாக்டர் சாம்பிரி அப்துல் காதிர் என்பவர் முதலமைச்சர் ஆனார். புதிய நிர்வாகத்தில் டத்தோ ஆர்.கணேசன் என்பவர் புதிய சபாநாயகராகத் தேர்வும் செய்யப்பட்டார்.

பேராக் மாநிலத்தின் உண்மையான பிரதிநிதி யார் எனும் பனிப் போர் மார்ச் 2011 வரை நீடித்தது.

பேராக் மாவட்டங்கள்[தொகு]

பேராக் நிர்வாகப் பிரிவுகள்
UPI
குறியீடு
மாவட்டம் மக்கள் தொகை
(2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
பரப்பளவு
(km2)
அமைவிடம் முக்கிம்கள்
0801 பத்தாங் பாடாங் 123,600 1,794.18 தாப்பா 4
0802 மஞ்சோங் 227,071 1,113.58 ஸ்ரீ மஞ்சோங் 5
0803 கிந்தா 749,474 1,305 பத்து காஜா 5
0804 கிரியான் 176,975 921.47 பாரிட் புந்தார் 8
0805 கோலாகங்சார் 155,592 2,563.61 கோலாகங்சார் 9
0806 லாருட், மாத்தாங், செலாமா 326,476 2,112.61 தைப்பிங் 14
0807 ஈலிர் பேராக் 128,179 792.07 தெலுக் இந்தான் 5
0808 உலு பேராக் 89,926 6,560.43 கிரிக் 10
0809 செலாமா இல்லை இல்லை இல்லை 3
0810 பேராக் தெங்கா 99,854 1,279.46 செரி இசுகந்தர் 12
0811 கம்பார் 96,303 669.8 கம்பார் 2
0812 முவாலிம் 69,639 934.35 தஞ்சோங் மாலிம் 3
0813 பாகன் டத்தோ 70,300 951.52 பாகன் டத்தோ 4
குறிப்பு: ஹீலிர் பேராக், பாகன் டத்தோ, பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய இடங்களுக்கான மக்கள்தொகைத் தரவு மாவட்ட நில அலுவலகத் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலு பேராக் மாவட்டம் மற்றும் கிந்தா மாவட்டம் ஆகியவற்றைத் தவிர, மற்ற பெரும்பாலான மாவட்டங்களும்; கிரிக், லெங்கோங், பெங்காலான் உலு துணை மாவட்டங்களும்; பத்து காஜா, ஈப்போ பெரும் நகரங்களும்; உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. பாகன் டத்தோ மாவட்டம்; தெலுக் இந்தான் நகராட்சி அதிகார வரம்பில் உள்ளது.[7]

மக்கள் தொகை[தொகு]

2018-ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி 2,500,000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 57% மலாயர். 29% சீனர், 11% இந்தியர், 3% ஏனைய இனத்தவர்களும் ஆவர். ஒரு காலக்கட்டத்தில் பேராக் மாநிலம் மலேசியாவிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்கியது.

ஈய விலை அனைத்துலகச் சந்தையில் வீழ்ச்சி அடைந்ததும் பேராக் மாநிலத்தின் பொருளாதாரமும் மங்கிப் போனது. அதனால் இந்த மாநிலத்தின் பெருவாரியான மக்கள் பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர் போன்ற வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். பேராக் மாநிலத்தின் வருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு வெறும் 0.4 விழுக்காடாகவே இன்னும் இருந்து வருகிறது.

பேராக் மாநிலத்தின் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை:

  • மலாயர் - 1,360,506 அல்லது 55.74%
  • சீனர் - 702,170 அல்லது 28.77%
  • இந்தியர் - 296,600 அல்லது 12.15%
  • பிற இனத்தவர் - 8,842 அல்லது 0.36%
  • குடியுரிமை இல்லாதவர் - 72,751 அல்லது 2.98%

புவியியல்[தொகு]

  • பேராக் மாநிலத்தின் பரப்பளவு 21,035 சதுர கிலோ மீட்டர்கள்.
  • மலேசியாவின் மொத்தப் பரப்பளவில் இது 6.4 விழுக்காடு.
  • தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது பெரிய மாநிலம். வருடம் முழுமையும் மழை பெய்கிறது.
  • புள்ளி விவரங்களின் படி ஓர் ஆண்டுக்கு 3,218 மில்லி மீட்டர் மழை பெய்கிறது என்று சொல்லலாம்.
  • தட்ப வெப்ப நிலை 23°C - 33°C வரை.
  • இது ஒரு குளிரான மாநிலம்.

சுற்றுலா இடங்கள்[தொகு]

பேராக் மாநிலம் சுற்றுலாவிற்கு மிகவும் பெயர் பெற்ற இடமாகும். நூற்றுக் கணக்கான சுற்றுலாத் தளங்கள் இந்த மாநிலத்தில் ஆங்காங்கே காணப் படுகின்றன.

கெல்லி கோட்டை[தொகு]

ஈப்போவில் இருந்து 20 கி.மீ தொலைவில் பழைமை வாய்ந்த கோட்டை ஒன்று உள்ளது. அதன் பெயர் கெல்லி காசல் (Kellie's Castle). இந்தக் கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது மட்டும் அல்ல. இந்தக் கோட்டையில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக ஒட்டு மொத்த மலேசியர்களே நம்புகின்றனர்.

இந்தக் கோட்டை வில்லியம் கெல்லி ஸ்மித் (William Kellie Smith) என்பவரால் 1915 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இந்தக் கோட்டையில் பாதாள அறைகளும் இரகசியச் சுரங்கப் பாதைகளும் உள்ளன. இப்போது பொது மக்களின் பார்வைக்குத் திறந்து விடப் பட்டுள்ளது.[8]

கல்லுமலை சுப்ரமணியர் ஆலயம்[தொகு]

குனோங் சீரா என்றால் சுண்ணாம்பு குன்றுகள் என்று பொருள். இந்தக் கோயில் 1889-ம் ஆண்டு கல்லுமலையின் அடிவாரக் குகையில் கட்டப் பட்டது. இப்போது இந்த குகைக் கோயில் மக்களின் வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புந்தோங் சுங்கைப்பாரி சாலையில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலுக்கும் இந்தக் குகைக் கோயிலுக்கும் ஒரே நிர்வாகம் உருவாக்கப் பட்டுள்ளது.

அன்று முதல் தைப்பூசக் காவடி காணிக்கைகள் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து கல்லுமலை சுப்ரமணியர் கோவிலுக்கு கொண்டு செல்லும்படியான முறை ஏற்பட்டது. 1926-ம் ஆண்டு நடைபெற்ற தைப்பூச விழாவின் போது, குனோங் சிரோ சரிவில் இருந்த பெரிய பாறை ஒன்று உடைந்து விழுந்ததில் இரு அர்ச்சகர்கள் மரணம் அடைந்தனர். இதனால் குகாலயத்தை அங்கிருந்து அகற்றும்படி அரசு உத்தரவிட்டது.

எனவே ஆலயத்தை மாற்றி அமைக்க தீர்மானிக்கப் பட்டது. தற்போது உள்ள இடத்தில் புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டது. 1930-ம் ஆண்டு வரை குகாலயமாக இருந்த கல்லுமலை கந்தன் ஆலயம் 1932-ம் ஆண்டில் சிற்ப வேலைப்பாடுகளுடன் சிறப்பிக்கப் பட்டது. அதே ஆண்டு இறுதியில் இப்புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

அதன் பின்னர் இக்கோயிலுக்கான பராமரிப்பு பணிகள் நடத்தப் பட்டன. தைப்பூச உற்சவம் மிக சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. இக்கோயிலுக்கு இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டும் அல்லாது பிற இனத்தை சார்ந்த மக்களும் வரத் தொடங்கினர். 1954-ம் ஆண்டு 15,000 ரிங்கிட் செலவில் மண்டபம் ஒன்று எழுப்பப் பட்டது.

அந்த மண்டபம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காகவும், முக்கிய விழாக்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது அந்த மண்டபம் திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மண்டபத்தில் பக்ல வகையான கலாச்சார நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன.

பேராக் மாநிலப் படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Perak @ a Glance". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  2. "Subnational Human Development Index (2.1) [Sarawak – Malaysia]". Global Data Lab of Institute for Management Research, Radboud University Nijmegen. பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
  3. 3.0 3.1 DOSM. "Department of Statistics Malaysia". www.dosm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  4. [ http://www.pccci.org.my/index.php?option=com_content&view=article&id=17&Itemid=40 Ipoh is the capital of Perak State of Malaysia. It was founded in the Year 1880, situated in Kinta Valley where abounds in tin-ore, whereby Ipoh becomes the world-wide famous “City of the Tin”.]
  5. "Gangga Negara is believed to be a lost semi-legendary Hindu kingdom mentioned in Sejarah Melayu that covered present-day Beruas, Dinding and Manjung in the state of Perak, Malaysia". Archived from the original on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  6. "The Town that Tin Built". Archived from the original on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  7. "Laman Web Pejabat Daerah Dan Tanah - Geografi". pdtselama.perak.gov.my.
  8. "Kellie's Castle was built by a Scottish planter his name called William Kellie Smith from a little town in Scotland. He built the building for his beloved wife". www.ipoh-city.com. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=பேராக்&oldid=3995922" இலிருந்து மீள்விக்கப்பட்டது